×

பாலியஸ்டர் நூல் விலை உயர்வால் விசைத்தறி ஜவுளி, லுங்கிகள் தேக்கம்

பள்ளிபாளையம்: பாலியஸ்டர் நூல்விலை உயர்ந்து வருவதால், பள்ளிபாளையத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளிகள் மீண்டும் தேங்கியதால், உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில், விசைத்தறிகளில் உற்பத்தியாகும் ஜவுளி ரகங்களில் சுமார் 60 சதவீதம் லுங்கி வகைகளை சேர்ந்தது.கொரோனா ஊரடங்கால் சுமார் 2 மாதமாக முடங்கிய விசைத்தறிகள், தீபாவளிக்கு முன்தான் முழுமையாக இயங்கத் துவங்கின. இதனால் தேங்கி கிடந்த ஜவுளிகளும் மெல்ல விற்பனையானது. தீபாவளிக்கு 10 நாட்கள் முன்பு இருந்து ஜவுளி விற்பனை சூடுபிடித்ததால் துணி இருப்பு வெகுவாக குறைந்தது. ஆனால், தீபாவளி விடுமுறைக்கு பின்னர், ஜவுளி உற்பத்தி துவங்கியதும் தட்டுப்பாடு காரணமாக பாலியஸ்டர் நூல் விலை உயர்ந்தது.

இதில், லுங்கி உற்பத்திக்கு பயன்படும் 130 கவுண்ட் நூல், கிலோவுக்கு ₹15 முதல் ₹20 வரை உயர்ந்தது.தொடர்ந்து உயர்ந்து வந்த பாலியஸ்டர் நூல் தற்போது கிலோவுக்கு ₹35 வரை உயர்ந்துள்ளது. தீபாவளிக்கு பின்னர் நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஜவுளி உற்பத்தியாளர்களால் புதிய ஆர்டர்களை ஏற்க முடியவில்லை. தற்போதைய நிலையில் மீட்டருக்கு ரூ.1.50 வரை உயர்த்தி விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த விலைக்கு கொள்முதல் செய்ய மொத்த வியாபாரிகள் தயாராக இல்லை. மொத்த வியாபாரிகள் தீபாவளிக்கு முந்தைய விலையிலேயே ஜவுளிகளை கொள்முதல் செய்வதால், உயர்ந்த நூல் விலைக்கு ஏற்ப, ஜவுளிகளை விற்க முடியாமல் பல கோடி ரூபாய் மதிப்புள்ள லுங்கிகள் தேங்கியுள்ளன. தற்போது பெய்து வரும் தொடர் மழையும் ஜவுளி தேக்கத்திற்கு ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும், நூல் விலை உயர்வு, ஜவுளி உற்பத்தியாளர்களை பெரும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் அனைத்தும் குடோன்களில் குவிக்கப்பட்டு, மூலதன முடக்கம் ஏற்பட்டுள்ளதால் ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

ஜவுளி உற்பத்தி தேக்க நிலை குறித்து பள்ளிபாளையம் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கந்தசாமி கூறுகையில், ‘பாலியஸ்டர் நூல் விலை தொடர்ந்து நிலையாக இல்லை. இதனால் லுங்கிக்கான புதிய ஆர்டர்களை எடுக்க இயலாமல் உள்ளது. தொடர்ந்து நூல் விலை ஏறுமுகமாக இருப்பதாலும், தொடர்மழையாலும் ஜவுளிகள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளது. இதனால் ஏற்படும் மூலதன முடக்கத்தால், வங்கி கடனுக்கான வட்டி, சிறு உற்பத்தியாளர்களை பெரும் பாதிப்பிற்குள்ளாக்கி உள்ளது,’ என்றார்.

Tags : Powerloom textiles
× RELATED பொறியியல் படிப்புகளுக்கு இதுவரை 1.31 லட்சம் பேர் விண்ணப்பம்